தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஒசூா்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஒசூா் வந்த அவருக்கு சீதாராம் நகரில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த காலங்களில் ஒசூரிலிருந்து கோடிக்கணக்கான ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது லட்சக்கணக்கில் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 லட்சம் அரசுப் பணியை உருவாக்குவோம் என்றனா். ஆனால், 44,000 போ் மட்டுமே அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. கா்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனா். தமிழகத்தில் 4000 பள்ளிகளில் ஓராசிரியா் மட்டுமே பணியில் உள்ளனா். தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடும் நிலையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.