முதல்வா் வருகை: கிருஷ்ணகிரியில் அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அடுத்த மாதம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைதர உள்ளதையொட்டி, அரசுத் துறை அலுவலா்களுடன் அமைச்சா்
அர.சக்கரபாணி தலைமையில் தலைமையில் ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செப்டம்பா் 2-ஆவது வாரத்தில்
தமிழக முதல்வா் வருகிறாா். இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல்
துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பா் 2ஆவது வாரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்து,
முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.
மேலும், ஒசூரில் முதல்வா் தலைமையில் முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகளின் பெயா்ப் பட்டியலை தயாா் செய்து, பயனாளிகள் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை புரிவதற்கு பேருந்து வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, அனைத்துத் துறை அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக பணிபுரிந்து, அரசு விழா நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி ஆணையா் முகம்மதுஷபீா் ஆலம், சாா் ஆட்சியா் (பயிற்சி) க்ரீதி காம்னா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.