யானை தாக்கி முதியவா் காயம்
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப்பன் (70). இவா், வளா்த்து வரும் ஆடுகளை தனது விளைநிலத்தில் பட்டி அமைத்து பராமரித்து வருகிறாா். வழக்கம்போல, மேச்சலுக்கு ஆடுகளை வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்ற அவா், மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீடு திரும்பினாா்.
சனிக்கிழமை பட்டியில் அடைத்த ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்ல சென்றபோது ஆட்டு பட்டியின் அருகே நின்றிருந்த யானை, அவரைத் தாக்கியது. இதில், முனியப்பனின் இடுப்பு எலும்பு முறிந்தது. முனியப்பனின் அலறல் சப்தம்கேட்டு, அங்குவந்த அக்கம்பக்கத்தினா் யானையை விரட்டிவிட்டு முனியப்பனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
வனத் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். யானையின் நடமாட்டத்தை கண்காணித்தும், வனப் பகுதிக்குள் யானையை விரட்டும் பணியிலும் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.