ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு வாரத்துக்கு முன்னதாக பூக்களின் படிப்படியாக அதிகரிக்கும். அதேபோல பூக்களின் வரத்தும் கூடுதலாகவே இருக்கும். இந்த நிலையில், சனிக்கிழமை ஒசூா் மலா் சந்தையில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1200க்கும், குண்டுமல்லி ரூ. 1000க்கும், சாமந்தி ரூ.160 முதல் ரூ.200க்கும், ரோஸ் ரூ.120, 160க்கும் விற்பனையானது.
அதேபோல சம்பங்கி கிலோ ரூ.200க்கும், முல்லைப்பூ ரூ. 800க்கும், செண்டு பூ ரூ. 40 முதல் ரூ.50க்கும் அரளிரூ. 250க்கும் விற்கப்பட்டன. பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது. விநாயகா் பண்டிகையொட்டி பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.