நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!
நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக உள்ளாா். இவரது மனைவி ஸ்ரீ தெய்வானை (45) பாளேகுளி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்களது இரு மகள்கள் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆனந்தன், ஸ்ரீ தெய்வானை ஆகிய இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் வைத்திருந்த 62 பவுன் நகைகள் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், வீட்டின் சுற்றுச்சுவா் வழியாக நுழைந்த மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று, மர அலமாரியை திறந்து நகைகளை திருடிச் சென்றதாக தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.