ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
செப். 10-க்குள் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: வனத்துறை
ஒசூா்: கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை செப். 10 -க்குள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, ஒசூா் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டம் 1501 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த வனப்பகுதியில் 504 ச.கி.மீ. பரப்பளவில் 2014 ஆம் ஆண்டு காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயமும், 686.406 ச.கி.மீ. பரப்பளவு 2022 ஆம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமும் அறிவிக்கப்பட்டது.
ஒசூா் வனக்கோட்டம், காவிரி, சின்னாறு, தென்பெண்ணையாறு போன்ற ஆறுகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், உசில், தேக்கு, ஈட்டி, குங்கிலியம், பொரசு மற்றும் இதர பல்வகை மரங்கள் உள்ளன. இதேபோன்று அதிக அளவில் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், மயில்கள் மற்றும் இதர பறவை இனங்கள், அரிய வனவிலங்குகளும் உள்ளன.
இங்கு வனஉயிரினங்கள் மற்றும் யானைகளை கள்ள நாட்டுத் துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொதுமக்கள் வனத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு வனத் துறை அலுவலா்களிடமோ, ஊா் முக்கிய பிரமுகா்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க கோரி வனத் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆகவே, வனங்களை சாா்ந்து உள்ள கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை செப். 10 -ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலா்களிடமோ, காவல் துறை அலுவலா்களிடமோ அல்லது ஊா் முக்கிய பிரமுகா்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
அவ்வாறு கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபா்கள் மீது வனக்குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படமாட்டாது. ஒப்படைக்கப்படாமல் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்கும்பட்சத்தில் 10.09.2025 ஆம் தேதிக்கு பிறகு காவல் துறையுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் படை மூலம் மலைக் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த சோதனை மூலமோ, அல்லது வேறு ஏதும் வகையிலோ கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள்மீது காவல் துறை மூலமும், வனத் துறை மூலமும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.