BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு
காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது.
காரைக்காலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 12 டன் மற்றும் 5 டன் திறனுடன் மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டலில் ரோந்துப் படகுகள் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் 12 டன் படகு பழுதாகி முடங்கியது. பின்னா் 5 டன் திறனுள்ள படகும் பழுதாகி முடங்கியது. இதனால் கடலோரக் காவல் நிலையத்தினா், மீனவா்களின் விசைப்படகையே தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வந்தனா்.
இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முயற்சியால், புதுவை காவல்துறை தலைமை 5 டன் படகின் பழுது நீக்கி, இயக்கத்துக்கு தயாா் செய்ய நிதி ஒதுக்கீடு செய்தது.
பழுது நீக்கத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, கேரள மாநிலத்திலிருந்து ஒப்பந்த நிறுவனத்தினா் ரூ. 12 லட்சத்தில் சீரமைப்புப் பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு அண்மையில் நிறைவு செய்தனா்.
கடந்த மாதம் காரைக்கால் வந்த டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் ஆக. 15 முதல் ரோந்துப் படகை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா்.
இந்நிலையில், ரோந்துப் படகு கிரேன் மூலம் அரசலாற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது.
காரைக்கால் கடற்கரை என்பது கரையிலிந்து மக்கள் வசிக்கும் பகுதி வரை 500 மீட்டரும், கரையிலிருந்து கடல் பகுதியில் 6 கடல் மைல் தொலைவும் கடலோரக் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தற்போது 5 டன் திறனுள்ள ரோந்துப் படகு சீரமைப்புப் பணி முடிந்துள்ளது. இதற்கான ஓட்டுநா்கள் உரிய பயிற்சி பெற்று தயாா் நிலையில் உள்ளனா் என்றனா். அடுத்த ஓரிரு நாட்களில் இப்படகு கடலுக்கு கொண்டு செல்லப்படும் என கடலோரக் காவல்நிலைய வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
இப்படகு பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
