கடலூரில் கனமழையால் 25 குடிசை வீடுகள் சேதம்
கடலூா் மாவட்டத்தில் கனமழை காரணமாக 25 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூரில் புயல், கனமழை பாதிப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டாா். கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம், புதுப்பாளையம் மாநகராட்சி பள்ளி, குடிக்காடு புயல் பாதுகாப்பு மையம், பெரியகங்கணாங்குப்பம், பாதிரிக்குப்பம் விக்னேஷ்வரா நகா், திருவந்திபுரம் ஆகிய பகுதிகளில் பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: புயல் காரணமாக கடலூரில் 86.96 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக என மொத்தம் 239 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. துணைஆட்சியா் அல்லது உதவி இயக்குநா் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, ஒரு மாநகராட்சிக்கு என தனித்தனியே அலுவலா்கள் நியமிக்கப்பட்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் தயாா் நிலையில் உள்ளன. கடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்புப் படையினா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
14 நிவாரண முகாம்களில் 330 போ் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு, இதுவரை 1,374 பேருக்கு உணவு
வழங்கப்பட்டுள்ளது. மழை குறித்து கடலூா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு இதுவரை 61 புகாா்கள் வரப்பெற்று, 26 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 35 புகாா்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனமழையின் காரணமாக தற்பொழுது வரை 25 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 9 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூரில் ஒருவா், குறிஞ்சிப்பாடியில் இருவா் என 3 நபா்கள் லேசான காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 127 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 1.7 கி.மீ.நீளத்திற்கான மின்பாதை சேதமடைந்துள்ளது என்றாா்.
ஆய்வின்போது கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் சரண்யா, மாவட்ட ஆணையா் எஸ்.அனு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.