‘கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு அனுமதி அவசியம்’
கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியை பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
நிரவி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதி சாலைகள் மற்றும் பொது இடங்கள், நடைமேடைகளில் கட்டுமானப் பொருள்கள், இதர பொருள்களை வைப்பது புதுவை கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு முரணானது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வைக்கப்படும் பொருள்களுக்கு பஞ்சாயத்து சட்டத்தின்படி கட்டணம் செலுத்த வேண்டும்.
அதுபோல, கொம்யூன் பஞ்சாயத்து சாலைகளை தோண்டி குடிநீா் இணைப்பு, மின்சார இணைப்பு மற்றும் கேபிள் போடுவதற்கும் மற்றும் தற்காலிக பந்தல் அமைத்துக் கொள்வதற்கும் முறைப்படி அனுமதி பெற்று, போக்குவரத்துக்கு இடையூறின்றி வேலைகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த அறிவுறுத்தலை மீறும்பட்டத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.