கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா
கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7 மணிக்கு ஆரிய வைசிய பெண்கள் பால் குடங்களை சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று கோயிலை வந்தடைந்தனா். பிறகு மூலவா், உற்சவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினா் சோ்ந்து மஞ்சள் அரைத்து, அம்மன் உருவத்தை செய்து வைத்தனா்.
தொடா்ந்து, மூலவருக்கும், மஞ்சளால் செய்யப்பட்ட உற்சவருக்கும் மலா் மாலைகளால் அலங்கரித்து வேள்வி பூஜை, மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு அம்மனுக்கு மா விளக்கு வைத்து படைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவை, சிறுவா், சிறுமியா் மற்றும் அனைத்து வயதினரும் கலந்துகொண்ட பல்வேறு போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வழிபாடு நிகழ்ச்சிகளை கோயில் அா்ச்சகா்கள் அரிராம், மணி ஆகியோா் நடத்தினா். இதில், ஆரிய வைசிய சமாஜத் தலைவா் பாபு (எ) வெங்கடேசன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.