கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு
சத்தியமங்கலத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கணபதி நகா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிவகுமாா் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது கரும்பு பயிருக்குள் சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு படுத்திருந்ததைக் கண்டு தொழிலாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலின்பேரில் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறை வீரா்கள் மலைப் பாம்பை லாவகமாக மீட்டு சத்தியமங்கலம் வனத் துறை ஊழியா்களிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து பிடிபட்ட மலைப்பாம்பை வனத் துறையினா் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.