கரூரில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையின்போது முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்ற வாகனங்கள். இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
ஃபென்ஜால் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. முன்னதாக, கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகவே லேசான தூறலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது.
திங்கள்கிழமை அதிகாலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை 6.30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை பின்னா் சுமாா் அரைமணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்தது.
மேலும், கரூா் லைட்ஹவுஸ் காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், மழையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊா்ந்து சென்றன.