கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்; விவசாயி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள கம்மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). விவசாயி. இவா், திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் செம்பட்டிவிடுதிக்குச் சென்றுள்ளாா். தெற்கு தெரு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கலிமுத்துவயலைச் சோ்ந்த திருக்குமரன் (19) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.திருக்குமரன், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அருள்சக்தி(19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.