கல்ட் கிளாசிக் - கமல் Vs ரஜினி | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
கல்ட் க்ளாசிக் (Cult Classic) - இது ஒரு அந்தஸ்து. 'க்ளாசிக்' என்றால் உன்னதமான படைப்பு. 'கல்ட் க்ளாசிக்' என்றால் வழிப்பாட்டு உன்னதமான படைப்பு. எந்த படைப்பு காலத்தில் நிற்கிறதோ அது கிளாசிக் வகையை சார்ந்தது.
எந்த படைப்பு காலம் கடந்தும் தன்னுடைய புகழில் உயர்ந்து கொண்டே போகிறதோ அதுவே கல்ட் கிளாசிக்.
கமல் - ரஜினி என்ற இந்த இரட்டையரின் படங்கள் கடந்த 40 வருடங்களாக அதிக தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கின்றன.
மூன்று தலைமுறை ரசிகர்களை கட்டிப் போட்டுள்ள ஆளுமை உள்ளவர்கள். இன்றும் திரையில் தனி கவர்ச்சியோடும் கம்பீரத்தோடும் காட்சியளிப்பவர்கள்.
ஒரே மாதிரி கதையம்சம் அல்லது கரு கொண்ட அவர்களின் படங்களின் ஒரு ஒப்பீடு :
1. மூன்று முகம் - அபூர்வ சகோதரர்கள்
மூன்று ரஜினி - மூன்று கமல்.
போலீஸ் -திருடன், குடும்ப சிதைப்பு, அதனூடான பழிவாங்கல். இதுவே கதைக்களம். அலெக்ஸ் பாண்டியனுக்கும் செந்தாமரைக்கும் நடக்கும் உரையாடல்கள் இன்றைக்கும் காண்போரை ரஜினி ஸ்டைலில் மெய் மறக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் அந்த செந்தாமரை - ரஜினி போலீஸ் ஸ்டெஷன் காட்சிகள் என்றென்றும் முத்திரை பதித்த போலீஸ் - ரவுடி உரையாடல் காட்சிகள்.
அதே போல், குள்ள கமல் அப்புவின் சர்க்கஸ் போன்ற 'சாகசம்' தொனிக்கும் ஒவ்வொரு கொலையும் இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் போதும் புதுமையாக இருக்கிறது.
2. நாயகன் - பாட்ஷா
உலகம் தழுவி பல உன்னதமான 'டான்' சினிமாக்கள் வந்தாலும் தமிழ் சினிமாவில் டான் சினிமாக்களுக்கு இலக்கணம் இரண்டே இரண்டு படங்கள்தான். ஒன்று நாயகன். இன்னொன்று பாட்ஷா.
இரண்டுமே மும்பையை அடிப்படையாக கொண்ட திரைக்கதையுடையது.
விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் சார்பாக ஒரு நாயகன் அவதரித்து, அவன் சார்ந்த மக்களை ரட்சிக்க கைகொள்ளும் வழி சட்டத்துக்கு புறம்பாக இருந்தாலும் அதுவே சமூக கறைகள் படிந்த அந்த சமூகத்தின் தேவையாக இருக்கிறது.
இதனூடே கதைக்களம் நாயகர்களின் சொந்த வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக நகர்கிறது.
வேலு நாயக்கர் 'க்ளாஸ்' என்றால் மாணிக் பாட்ஷா 'மாஸ்'. இருவருமே தத்தம் வகையில் 'உச்சம்' தொட்ட படங்கள் இவை என்றால் அது மிகையாகாது.
3. தில்லுமுல்லு - அவ்வை சண்முகி
ரஜினி - கமல் இருவரும் செய்த பல முழு நீள காமெடி படங்ளின் மணிமகுடங்கள் இவை.
'ஆள்மாறாட்டம்' - இதுவே இரண்டு படங்களின் நகைச்சுவை நாதம்.
ஒன்றில், வேலைக்காக தன் பழமைவாத மற்றும் கண்டிப்பான முதலாளியை தாஜா செய்ய மீசை வைத்தும் மற்றும் வைக்காமலும் ஏமாற்றி தில்லு முல்லாட, இன்னொன்றில் விவாகரத்து கோரிய மனைவிக்கு தன் பக்க நியாயத்தையும் இன்னும் வற்றாத காதலையும் குன்றாத அன்பு கலந்த தந்தைமையையும் வெளிப்படுத்த 'வேல மேல வேல' செய்யும் மாறுவேஷமிட்ட 'ஹைப்பர் ஆக்டிவ்' மாமியாக ஆள்மாறாட்ட கதகளி ஆடும் படங்கள் இவை.
சிரிப்பே துன்பம் போக்கும் அரு மருந்தாய் படங்களின் ஆரம்பம் முதல் இறுதிவரை நீக்கமற நிறைந்திருக்கிறது.
4. மூன்றாம் பிறை - ஆறிலிருந்து அறுபது வரை.
சோகம், சோக இழை மற்றும் படமெங்கிலும் ஒரு வெறுமை. இது போன்ற படங்கள் கமலுக்கு பழகியவை என்றாலும் ரஜினிக்கு அரிதானவை. அப்படி ஒரு படம் தான் ஆறிலிருந்து அறுபது வரை. இதற்கு நிகராக நிறைய கமல் படங்கள் சொல்லலாம் என்றாலும் மூன்றாம் பிறை என்ற ஒரு படமே இந்த படத்துக்கு சிறந்த ஒப்பீடாக தோன்றுகிறது.
ஒன்று, காதல் நிமித்தம் பைத்தியமாகி நம்மையும் கதைமாந்தர்களில் பைத்தியமாக்கி இறுதியில் சோகத்தில் நிறைப்பது.
இன்னொன்று பாசம், சகோதரத்தால் வெள்ளந்தியான ஒரு மனிதன் படும் பாட்டை விவரிக்கிறது அளவுக்கதிகமான சோக சகிதத்துடன். இரண்டும் கதைக்களங்களில் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவை கடத்தும் செய்தி ஒன்றுதான் - அது 'அன்பு ஒன்றே இறுதியில் அனாதை' என்பதை.
இரு படங்களின் இறுதியிலும் நம் மனதை ஒரு கனத்த வெறுமையே ஆட்கொள்கின்றது.
5. தசாவதாரம் - எந்திரன்
நான்கு தசாப்தங்களாக கதாநாயகர்களாக வலம் வருகின்ற ரஜினி மற்றும் கமல் தமிழ் சினிமாக்களின் தொழில்நுட்பம் (technology) யுகத்துக்கும் தங்களைப் புனரமைத்துக் கொண்டார்கள்.
கமல் என்றைக்குமே டெக்னாலஜியோடு தன்னை தொடர்புபடுத்தும் ஒரு நாயகன் என்றாலும், ரஜினிக்கு தொழில்நுட்பம் (technology) புதுசு.
ஆனால் ரஜினியும் அந்த டெக்னாலஜி நிரம்பிய படத்தில் வில்லத்தனம் செய்யும் ரோபோவாக அசரடித்தார். காண்பவர்களை 16 வயதினிலே 'வில்லத்தன' பரட்டை கதாபாத்திரத்துக்கே கொண்டு சென்றார்.
இன்னொரு பக்கம் கமல் அதே டெக்னாலஜியை வைத்துக் கொண்டு தசஅவதாரம் எடுத்தார்.
எஸ் எஸ் வாசன் தயாரித்து இயக்கிய சந்திரலேகா படம் 1948-ல் இருந்து இன்றுவரை தமிழ்சினிமாவில் பிரம்மாண்டத்தின் குறியீடாக பார்க்கப்படுவது போல் இவ்விரு படங்களும் டெக்னாலஜி யுகத்தில் தமிழ் சினிமாவின் அசுரப் பாய்ச்சலுக்கு முன்னோடி படங்களாக என்றும் பார்க்கப்படும்.
- மணிசங்கரன். பா.ந.
நெல்லிக்குப்பம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...