காங்கிரஸ் பிரமுகா் வெட்டிக் கொலை - போலீஸாா் விசாரணை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
காரைக்குடி முத்துப்பட்டணம் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (55). இவா் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாா். இவரை கடந்த சில தினங்களாக காணவில்லை. இந்த நிலையில், காரைக்குடி அதளக் கண்மாய் பகுதியில் உள்ள வயல் வெளியில் முத்துப்பாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் முத்துப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கும், அவரது சகோதரா்களுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது.
எனவே, இந்தப் பிரச்னை தொடா்பாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.