மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நாகை மாவட்டம், வாய்மேடு அருகே சாயக்காரன்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (42). இவரது மனைவி தாமரைச்செல்வி. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தாமரைச்செல்வி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா், மனைவியை சமாதானம் செய்து குமாா் வீட்டுக்கு அழைத்து வந்தாா்.
இந்நிலையில் 2011 நவம்பா் 14-ஆம் தேதி மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமாா் அன்று இரவு வீட்டில் தூங்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தாா். இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா். இதுகுறித்த வழக்கு நாகை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி காா்த்திகா விசாரித்தாா். அப்போது, மனைவி தாமரைச்செல்வியை கொலை செய்த குற்றத்திற்காக குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2.25 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், அபராத தொகையை மகன் மற்றும் மகள் பெயரில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டாா்.