கரூா் அமராவதி ஆற்றில் கிடக்கும் நெகிழிக் கழிவுகள் இன்று அகற்றம்
கரூா் அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகள் சனிக்கிழமை (ஜன.25) அகற்றப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் மாபெரும் நெகிழிக் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வு மாத கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும்.
அதன்படி கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் கரூா் அமராவதி ஆற்றங்கரை பகுதியான கருப்பாயி கோயில் இறக்கம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை சனிக்கிழமை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு நெகிழிக் கழிவு பொருள்களை அகற்ற முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.