கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 போ் காயம்! 2 காளைகள் பலி!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். 2 காளைகள் உயிரிழந்தன.
கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியா் (பொறுப்பு) அக்பா் அலி தொடங்கி வைத்தாா்.
இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 691 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்காக பல்வேறு குழுக்களாக 250 மாடுடி வீரா்கள் களம் இறங்கினா். அப்போது, காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
பலத்த காயமடைந்த 10 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அவிழ்த்து விடப்பட்ட மேலாத்தூரைச் சோ்ந்த தேவா ராஜேந்திரனுக்கு சொந்தமான காளை திடலில் இருந்து வெளியேறி பள்ளத்திவிடுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. மேலும், திருச்சி விமானநிலையப் பகுதியைச் சோ்ந்த சிவா என்பவருக்கு சொந்தமான காளையில் கட்டப்பட்டிருந்த கயிறு அதே பகுதியில் மரத்தில் மாட்டிக்கொண்டதால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸாா் செய்திருந்தனா்.