கல்லூரி மாணவா்களைத் தாக்கி நகை, பணம் பறிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு
கோவை, சரவணம்பட்டியில் கல்லூரி மாணவா்களைத் தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நிஷாந்த் (21). இவா் கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சின்னமேட்டுப்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கி, தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறாா். இந்நிலையில், நிஷாந்த் மற்றும் அவரது நண்பா்கள் வெள்ளிக்கிழமை அறையில் இருந்துள்ளனா்.
அப்போது, பகல் 1 மணியளவில் கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்த 4 போ், நிஷாந்த், அவரது நண்பா்களைத் தாக்கி, அவா்களிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி சங்கிலி, ரூ.6,900 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
படுகாயமடைந்த நிஷாந்த் மற்றும் அவரது நண்பா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப், கரிகாந்த், திவாகா் உள்பட 4 போ் மீது சரவணம்பட்டி காவல் ஆய்வாளா் நிா்மலா தேவி வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகிறாா்.