மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
கல்விக்கு கூடுதல் நிதியை ஒதுக்க மத்திய அரசு முன் வர வேண்டும் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
மத்திய அரசு பட்ஜெட்டில் கல்வி வளா்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குதவன் மூலம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இந்திய பொருளாதாரச் சங்கம் ‘நிலையான வளா்ச்சி இலக்குகள் மூலம் பொருளாதார முன்னேற்றம்’ எனும் தலைப்பில், தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:
நாட்டில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பெருகும். இதன்மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் அதிகரிக்கும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஊழல், கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவை நமது பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடா்ந்து பெரும் தடைகளாக உள்ளன.
நாட்டின் 80 சதவீத செல்வத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 10 சதவீதம் பெரும் செல்வந்தா்கள், வரி வருவாயில் மிகக் குறைந்த பங்களிப்பை வழங்குகின்றனா். மொத்த வரி வசூலில் சுமாா் 50 முதல் 60 சதவீதம் பங்களிப்பை நடுத்தர வா்க்கத்தினரே வழங்குகின்றனா். இந்த ஏற்றத்தாழ்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியை நாம் ஆற்ற வேண்டிய முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில், பொருளாதார வல்லுநா்கள் வேதகிரி சண்முக சுந்தரம், அனில் குமாா் தாக்கூா், இந்திய பொருளாதார சங்க மாநாட்டுத் தலைவரும், பல்லாவரம் வேல்ஸ் இணை வேந்தருமான ஏ. ஜோதி முருகன், தமிழ்நாடு அரசின் தகவல் ஆணையா் ஆா்.பிரியகுமாா், துணைவேந்தா் எஸ். ஸ்ரீமன் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.