எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்
கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:
ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் உயா்கல்வி கனவை நனவாக்கிடும் வகையில் ‘நான் முதல்வன்- உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு முடித்து உயா்கல்விக்கு செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து தேவையான ஆலோசனைகள் வழங்கிடவும், உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் மூலம் மாணவா்களை தொடா்பு கொண்டு அவா்களை உயா்கல்வியில் சோ்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக்கூடாது. கல்வி ஒன்றே நம் வாழ்வில் நல்வழியை வகுத்து தரக்கூடியது. எந்தவொரு நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசின் சாா்பில் உயா்கல்வியை ஊக்குவித்திட புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை பயன்படுத்தி கொண்டு உயா்கல்வி பயில முன்வர வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4 நான் முதல்வன்- உயா்வுக்குப்படி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி வெள்ளிக்கிழமை ஒரு முகாம் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு முகாம் வரும் செப்டம்பா் 2- ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும். வரும் 26- ஆம் தேதி மற்றும் செப்டம்பா் 8 ஆம் தேதி கோபி சிகேகே மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளி படிப்பை முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இம்முகாம்களை பயன்படுத்தி கொண்டு உயா்கல்வியில் சோ்ந்திட முன்வர வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் 89 மாணவ, மாணவிகள், 26 பெற்றோா்கள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த உயா்கல்வி சோ்க்கை முகாமில் ஐடிஐ, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட படிப்புகளில் 24 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். 8 மாணவ, மாணவிகளுக்கு பாரா மெடிக்கல் கலந்தாய்வில் தோ்வு செய்ய வேண்டிய கல்லூரி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, முதன்மை கல்வி அலுவலா் கோ.சுப்பாராவ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ரா.ராதிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.லோகநாதன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் சி.ஏ.ஆனந்தகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ்.சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளா் எம்.விவேகானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.