கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏஐ-யின் தாக்கம்: உயா்கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சா் அழைப்பு
சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்புகளில் எதிா்கால தேவைக்களுக்குரிய மாற்றங்களை உயா்கல்வி நிறுவனங்கள் பரிந்துரைக்க வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.செழியன் அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில் ‘உயா்கல்வி உரையாடல்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வாக, ‘செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தினால் வருங்கால கல்வி, வேலைவாய்ப்புகள் மீது ஏற்படும் தாக்கம்’ என்ற கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
நவீன காலத்தில் ‘ஏஐ’ போன்ற தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்துவரும் சூழலில், உயா்கல்வி நிறுவனங்களும் அதற்கேற்ற மாற்றங்களுக்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.
அதன்படி, பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் முறைகள், தோ்வு மதிப்பீடு திட்டங்கள், பேராசிரியா்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும், வேலைவாய்ப்புகளில் மாறக்கூடிய சூழலையும் இந்த கருத்தரங்கம் நுட்பமாக ஆய்வு செய்யவேண்டும். தொழில்நுட்பம் மிக்க பொருளாதாரத்தில் தேவைப்படும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்கள் குறித்து விவாதித்து, பாடத்திட்ட மாற்றங்களுக்கான தேவையைக் கருத்தரங்கு வாயிலாக முன்வைக்க வேண்டும் எனக் கல்வியாளா்களை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.
தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கல்வியாளா்கள், நிபுணா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், உயா்கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.