கல் குவாரிகளைப் பாதுகாக்கக் கோரி வழக்கு: கனிமவளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கக் கோரிய வழக்கில், கனிமவளத்துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கனிமவளச் சட்டப்படி கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாப்பதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கனிமவளத் துறை உதவி இயக்குநா், மாவட்ட வருவாய் அலுவலா், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா், தீயணைப்புத் துறை அலுவலா் உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பராமரிக்க, பசுமை நிதியை முறையாக வசூலித்து, உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மட்டும் கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்க அந்தந்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவற்றில் 6 மாவட்டங்களில் மட்டும் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்கக் குழு அமைக்கவும், பசுமை நிதி வசூல் செய்வதை உறுதிப்படுத்தவும், பாதுகாப்புக் கருதி குவாரிகளைச் சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழக இயற்கை வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், கனிமவளத் துறை இயக்குநா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.