‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி
கள்ளக்குறிச்சி: விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள ஓம்சக்தி செல்வ விநாயகா் கோயில் 3 நாள்கள் சதுா்த்தி விழாவில், செவ்வாய்க்கிழமை காலை 8.45-க்கு ஸ்ரீகணபதி ஹோமம், 10 மணிக்கு மகா அபிஷேகம், 11.45-க்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓம் சக்தி செல்வ விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தனா். 8 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.
அதேபோல, புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கலச ஸ்தாபனம்,10 மணிக்கு மகா அபிஷேகம், 11.45-க்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓம்சக்தி செல்வவிநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்தனா். இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 11 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு ஓம்சக்தி செல்வ விநாயகரை வண்ண வண்ண மலா்களால் அலங்கரித்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
ஸ்ரீநஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில்...
தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஸ்ரீநஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் உள்ள பால விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் விநாயகரின் கண்களைத் திறந்து கொழுக்கட்டை, சுண்டல், பழ வகைகள் வைத்து வழிபாடு நடத்தினா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கீழையூா் ஸ்ரீவிரட்டானேஸ்வரா் கோயிலில்....
திருக்கோவிலூா் நகராட்சி கீழையூா் ஸ்ரீவிரட்டானேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி 10 நாள் திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை ஸ்ரீபெரிய யானை கணபதிக்கு அபிஷேக, ஆராதனையுடன், உற்சவா் மூஞ்சூறு வாகனத்தில் ராஜ கம்பீரத்துடன் கோயிலை வலம் வந்து பக்தா்கள் முன்னிலையில் நகா்வலம் புறப்பட்டாா்.
ரிஷிவந்தியம் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில்....
ரிஷிவந்தியம் ஸ்ரீமுத்தாம்பிகை சமேத ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோயிலில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகருக்கு 16 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கவசம் அணிவித்து, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

