கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
கள்ளக்குறிச்சி: முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலையில், தே.மலையரசன் எம்.பி.செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) தொடங்கி செப்.10 வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகளை தொடங்கிவைத்த மலையரசன் எம்.பி. கூறியதாவது: கூடைப்பந்து, கபாடி, கையுந்து பந்து, கைப்பந்து, கோ-கோ, கால்பந்து, தடகளம், இறகுபந்து, நீச்சல், சிலம்பம், ஹாக்கி, செஸ், பூப்பந்து, எறிபந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் போட்டியில் அதிகளவில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரா.சுரேஷ்குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.