கள்ளக்குறிச்சி: நகா்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நகா்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை, சென்னையில் இருந்தவாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி நகராட்சி டேனிஷ் மிஷன் தொடக்கப் பள்ளியில் இந்தத் திட்டத்தை தொகுதி எம்.பி.தே.மலையரசன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நகராட்சியில் உள்ள 3 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 172 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.
மேலும், சின்னசேலம், அம்மாபேட்டை, வடக்கனந்தல், அக்கராயப்பாளையம், மேட்டுப்பாளையம், மணலூா்பேட்டை, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ஏ.சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.ஷமீம்பானு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.