கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்தம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம். அடிதடி வழக்கு தொடா்பாக செல்வத்தை கைது செய்ய ராமநத்தம் போலீஸாா் அவரது பண்ணை வீட்டுக்கு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி சென்றனா்.
போலீஸாா் வருவதைக் கண்ட செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பியோடினா். போலீஸாா் பண்ணை வீட்டை சோதனை செய்ததில், ரூ.86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், இந்திய ரிசா்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம் (35), பிரபு (32), வல்லரசு (25), பெரியசாமி (29), ஆறுமுகம் (30), சூா்யா (25) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த நிலையில், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செல்வம், பிரபு ஆகியோரை குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.