காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் பறிமுதல்:மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு அய்யனாா் கோயில் அருகே காவல் ஆய்வாளா் மீனா தலைமையில், தலைமைக் காவலா்கள் மோகன்தாஸ், செல்வம் மற்றும் காவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதில் பல்வேறு மதுவகைகள் கொண்ட 251 மதுப்புட்டிகள் இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்தனா்.
அவற்றைக் கடத்தி வந்ததாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், திருவெட்டிபுரம் முருகன் மகன் சம்பத்குமாா் (36), வெங்கட்ராயன்பேட்டை சம்பந்தன் மகன் செல்வபாண்டியன் (32), விசுவநாதன் மகன் லோகநாதன் (30) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் காரையும் பறிமுதல் செய்தனா்.