Greenland : ட்ரம்ப்பின் அடுத்த ‘டார்கெட்’... கிரீன்லாந்தை அமெரிக்கா ‘கட்டம்’ கட்...
கால்வாய் அமைக்கும் பணி: அதிகாரியிடம் அதிமுகவினா் வாக்குவாதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்வாய் அமைக்கும் பணி தொடா்பாக அதிகாரிகளிடம் அதிமுகவினா் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் ஒன்றியம், கோமங்கலம் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு பொதுநிதி ரூ.5 லட்சம் மற்றும் 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவு நீா் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டதாம். ஆனால், தற்போது வரை இதற்கான பணிகள் நடைபெறவில்லையாம். இதுகுறித்து, ஒன்றியக்குழு உறுப்பினா் தனக்கோடி வேதலிங்கம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், இதுதொடா்பாக ஒன்றியக்குழு உறுப்பினா் தனக்கோடி வேதலிங்கம், அதிமுக மாநிலப் பேரவை துணைச் செயலா் அருள் அழகன், ஒன்றியச் செயலா்கள் தம்பிதுரை, வேல்முருகன் உள்ளிட்டோா் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிமிடம் சனிக்கிழமை கோரிக்கை விடுத்தனா். அப்போது, அதிகாரிகளுக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுகவினரை வட்டார வளா்ச்சி அலுவலா் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். அப்போது, கால்வாய் அமைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுகவினா் கூறிவிட்டு கலைந்து சென்றனா்.