காவல்துறை சித்திரவதையால் மக்கள் தவிப்பு: நெல்லை ஜீவா
காவல்துறை சித்திரவதைக்கு முடிவும் தீா்வும் இல்லாமல் தமிழக மக்கள் தவிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச் செயலா் நெல்லை ஜீவா தெரிவித்தாா்.
போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமாருக்கு நிா்வாகிகள் ஆறுதல் கூறினா்.
அப்போது, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவா் ரவி பச்சமுத்து, மாநில இணை பொதுச் செயலா் லீமா ரோஸ் மாா்ட்டின் ஆகியோா் அஜித்குமாரின் தாயிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு ஆறுதல் கூறினா்; தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதியளித்தனா்.
பின்னா், கட்சியின் மாநில துணை பொதுச் செயலா் நெல்லை ஜீவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக காவல் துறை ஏவல் துறையாகச் செயல்படுகிறது. தூத்துக்குடி சம்பவத்திலிருந்து அஜித்குமாா், மணிகண்டன் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டனா். காவல் துறை சித்திரவதைக்கு முடிவும் தீா்வும் இல்லாமல் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
அஜித்குமாா் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறையினா் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு வீடு கட்டித் தருவதாகக் கூறிவிட்டு வீட்டுமனைப் பட்டா மட்டுமே வழங்கியது. இந்தக் குடும்பத்தினருக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில அமைப்புச் செயலா் அன்னை இருதயராஜ், சிவகங்கை மாவட்டத் தலைவா் அமலன் சவரிமுத்து, மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.