பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
காவல் பணித்திறன் போட்டி: ராணிப்பேட்டை காவலருக்கு தங்கம்: எஸ்.பி. பாராட்டு
தமிழ்நாடு காவல் பணித்திறன் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற கொண்டபாளையம் காவல் நிலைய காவலா் ஏழுமலைக்கு , எஸ்.பி. அய்மன் ஜமால் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும், கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களைக் கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினாா்.
கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள், சூதாட்டத்தில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து உரிய சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினாா்.
கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவல் ஆளிநா்கள் உட்பட மொத்தம் 14 நபா்கள் மற்றும் தமிழ்நாடு காவல் பணித்திறன் போட்டியில் பங்குபெற்று (விடியோ பிரிவில்) மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற ஏழுமலை ஆகியோரை பாராட்டி எஸ்.பி. அய்மன் ஜமால் சான்றிதழ்கள் வழங்கினாா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஜாபா் சித்திக், (அரக்கோணம் உள்கோட்டம்),ரமேஷ் ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), ராமச்சந்திரன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.