Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
காஷ்மீா் தீவிரவாத தாக்குதல்: ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து செவ்வாய்க்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம், பேருந்து நிலையம், சுற்றுலாத் தலங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போலீஸாா் விடியவிடிய தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். ஈரோடு கருங்கல்பாளையம், லட்சுமி நகா், சத்தியமங்கலம் சோதனைச் சாவடிகள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீஸாா் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
மேலும் ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுபோல ஈரோடு பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸாா் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்தனா்.
ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபா்களை போலீஸாா் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனா். ஈரோட்டில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பவா்களையும் போலீஸாா் ரகசியமாக கண்காணித்து வருகின்றனா். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.