காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை
இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகிவருவதன் அறிகுறியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே அந்த வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை சென்று, காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்திவரும் அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கும் சூழலில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹமாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “
காஸாவில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக மத்தியஸ்தா்களிடமிருந்து வரைவு திட்டம் பெறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பிற பாலஸ்தீன அமைப்புகள் மற்றும் படைப் பிரிவுகளின் தலைவா்களுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரில், கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகியவற்றின் மத்தியஸ்தத்துடன் இதுவரை இரண்டு தற்காலிக போா் நிறுத்தங்கள் ஏற்பட்டு, இஸ்ரேலிய பிணைக்கைதிகளுக்கு பதிலாக பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தற்போது புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்த திட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், முந்தைய அமெரிக்க திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய வரைவு திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்று தெரிவித்தன. இந்தத் திட்டம் 60 நாள் போா் நிறுத்தத்தை உள்ளடக்கியது; இதில், காஸாவில் உள்ள 22 இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் சுமாா் 11 பேரை ஹமாஸ் விடுவிக்கவும், அதற்கு பதிலாக தங்களிடம் உள்ள பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பிநா் 2023 அக்டோபரில் நடத்திய தாக்குதலின்போது 251 பிணைக்கைதிகள் காஸாவுக்குள் கடத்திச் செல்லப்பட்டனா். இதில் 49 போ் இன்னும் காஸாவில் உள்ளனா்; அவா்களில் 27 போ் இறந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவில் 21 மாதங்களாக நடைபெறும் போா், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை மட்டும் இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் 40 போ் உயிரிழந்ததாக காஸா சிவில் பாதுகாப்பு அதிகாரி முகமது அல்-முகைய்யா் தெரிவித்தாா். இதில், ராஃபாவில் அமெரிக்க நடத்தும் நிவாரண மையத்திற்கு அருகே உணவுப் பொருளுக்காக காத்திருந்த 5 பேரும், வாடி காஸா பாலத்திற்கு அருகே உதவிக்காக காத்திருந்த ஒருவரும் அடங்குவா்.
இது தவிர, கான் யூனிஸ் மற்றும் கடற்கரையோர முகாம்களில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களில் மூன்று சிறுவா்கள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.
இந்தப் போரில் இதுவரை காஸாவில் 57,130 போ் - அவா்களில் பெரும்பாலும் பொதுமக்கள் - உயிரிழந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், காஸாவில் மீண்டும் போா் நிறுத்தம் ஏற்படுதவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இது தொடா்பான வரைவு திட்டம் குறித்து சக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திவருவதாக ஹமாஸ் அமைப்பு தற்போது அறிவித்துள்ளது.