இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகருக்குட்பட்ட நாஸர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் ராணுவம் இரு முறை தொடர்ந்து இன்று (ஆக. 25) தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 4 வது தளத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில், ராய்ட்டர்ஸ், அசோசியேடட் பிரஸ், அல் ஜஸீரா போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
கடந்த 22 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவத்துக்கும் காஸாவிலுள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில், காஸாவின் முக்கிய மருத்துவமனையாக உள்ள நாஸர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
போரினிடையே, மருந்துப் பொருள்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு இங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கொடூரத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

உணவு வாங்கச் செல்வோர் மீதும் தாக்குதல்
காஸாவில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமான உதவிகளையும் நுழைய விடாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
தற்போது அமெரிக்கா - இஸ்ரேல் ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனம் மட்டுமே காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் குழந்தைகள், பெண்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனம் தரப்பில் கூறப்படுகிறது.
உண்மையை மறைக்கும் பொருட்டு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் இத்தகைய செயலுக்கு அல் ஜஸீரா பத்திரிகை நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | சுனாமியை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவர்! ஜப்பான் கட்டியிருக்கிறது!!