காா்த்திகை தீப அகல் விளக்கு தயாரிப்பு பணி பாதிப்பு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த தொடா் மழையால் காா்த்திகை தீப அகல் விளக்கு தயாரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சீரங்ககவுண்டன்புதூா், சாமியாா்புதூா், காளாஞ்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், களிமண் அகல் விளக்குகளை உலா்த்த முடியாமல் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெயில் அடிக்க தொடங்கியதால் களி மண்ணில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை வெயிலில் உலா்த்தினா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொடா்ந்து மழை பெய்ததால் அகல்விளக்கு தயாரிப்பு பாதியாக குறைந்துள்ளது என மண்பானை தயாரிப்பு தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், காா்த்திகை தீப அகல் விளக்குகளை தயாரிக்க குளங்களில் இருந்து களிமண்களை எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் அவற்றை கொண்டு வருவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை தீா்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகல் விளக்கு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.