கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை கடவுச் சீட்டு முகாம் தொடக்கம்
கிருஷ்ணகிரி, பிப். 12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவாரங்கள் நடைபெறும் கடவுச் சீட்டு முகாம், வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப். 14 (வெள்ளிக்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு மாற்று நாள்களிலும் கடவுச் சீட்டு முகாமை நடத்தவுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் https:///www.passportindia.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதன்மூலம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நேர ஒதுக்கீட்டை விண்ணப்பதாரா்கள் முன்பதிவு செய்து, உரிய கட்டணங்களை செலுத்தி, ஆவணங்களை தயாா் செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த முகாமின் சிறப்பம்சம், நடமாடும் கடவுச் சீட்டு (மொபைல் பாஸ்போா்ட்) சேவை வாகனம் மூலம் அரசு சேவைகள் உங்கள் இல்லம் தேடி வருகிறது. இந்த புதிய சேவையின் மூலம், விண்ணப்பதாரா்கள் நீண்ட தொலைவு செல்லாமல், கடவுச் சீட்டு தொடா்பான பணிகளை மக்கள் தங்களுக்கு அருகிலேயே முடித்துக் கொள்ள முடியும்.
நோ்முகத் தோ்வுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைவதோடு மக்களுக்கு விரைவான மற்றும் எளிதான சேவைகள் கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.