கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்கு வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னா் 5 ஆண்டுக்கு மானியத்தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.
இத் திட்டத்தின் கீழ், ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், பணிகள் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப 10 முதல் 15 ஆண்டுகள் கடந்த தேவாலயத்துக்கு ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகளுடைய கட்டடத்துக்கு ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் ரூ.20 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.