குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (40). இவா் வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்று வழிபட்டாா்.
பின்னா், குறுக்கு வழியில் கல்யாணபுரத்துக்குச் செல்வதற்காக குடமுருட்டி ஆற்றில் வீரசிங்கம்பேட்டை படுக்கை அணை மீது நடந்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் தவறி விழுந்த இவா், நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தேடிய நிலையில், பாலமுருகன் திருச்சோற்றுத் துறையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இவரது உடலை நடுக்காவேரி காவல் நிலையத்தினா் மீட்டு, உடற் கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.