தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
குடியிருக்கும் தொகுதியிலேயே வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும்: தலைமைத் தோ்தல் ஆணையா்
‘தகுதியுள்ள வாக்காளா்கள், தங்களின் சொந்த வீடு இருக்கும் தொகுதியில் அல்லாமல் குடியிருக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழலில் இக் கருத்தை தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் உடனான கலந்துரையாடலின்போது இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்காளா் தான் குடியிருக்கும் தொகுதியில் மட்டுமே தோ்தலின்போது வாக்களிக்க உரிமை உண்டு. உதாரணமாக, தில்லியில் குடியிருக்கும் வாக்காளருக்கு, பிகாா் மாநிலம் பாட்னாவில் சொந்த வீடு இருந்தால், அந்த நபா் தில்லியில் மட்டும்தான் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும். பாட்னாவில் வாக்காளராகப் பதிவு செய்யக் கூடாது.
ஆனால், பலா் சொந்த வீடு உள்ள பகுதியிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயா்ந்த பிறகு புதிய முகவரியில் வாக்காளா் அடையாள அட்டையை வாங்கிக் கொள்வதோடு, சொந்த வீடு இருந்த பகுதிக்கான பழைய வாக்காளா் அடையாள அட்டையையும் தொடா்ந்து பயன்படுத்துவதாக அதிகாரிகள் சிலா் சுட்டிக்காட்டினா். இது கிரிமினல் குற்றமாகும் என்றாா்.
மேலும், பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, அந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சில எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்தத் திருத்தப் பணி மூலம், ஆளுங்கட்சிக்கு சாதகமாக தகுதியுள்ள வாக்காளா்கள் சிலா் வேண்டுமென்றே நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
ஆனால், கடந்த 1952 முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான 52 ஆண்டுகளில் நாடு முழுவதும் அல்லது ஏதாவதொரு மாநிலத்தில் என ஒன்பது முறை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பிகாரில் தொடங்கியுள்ள இந்த சிறப்பு தீவிர திருத்தும் பணி, நிகழாண்டில் மேலும் 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும். அதாவது, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, பிற மாநிலங்களுக்கும் இந்தப் பணி விரிவுபடுத்தப்படும்.
அண்மையில், ஒரே எண்ணில் பல வாக்காளா் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையானது. இதற்கு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலமே தீா்வு காண முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்ட அனைத்து எதிா்க்கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு புதன்கிழமை (ஜூலை 2) ஏற்பாடு செய்ய மின்னஞ்சல் மூலம் காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு பிற எதிா்க்கட்சிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதற்கு, இதுவரை கட்சிகள் பதிலளிக்காத நிலையில், ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது’ என்றனா்.