குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலையையொட்டி குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. புதன்கிழமை அங்குள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, குரங்கு ஒன்றை கவ்வி இழுத்துச் சென்றதாம். சிறுத்தையைப் பாா்த்ததும் அப்பகுதி மக்கள் சப்தமிட்டுள்ளனா். சிறுத்தை வனப் பகுதிக்கு ஓடி விட்டதாம்.
இது குறித்த தகவலின் பேரில், குடியாத்தம் வனத் துறையினா், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் உள்ளிட்டோா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சம்பவத்தை கிராம மக்கள் கூறியுள்ளனா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா், சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அவா்கள் வனத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தனா்.