தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு
வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்கள்
பிரேம்குமாா் (32), அஜித்குமாா் (29). இதில், பிரேம்குமாருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வந்த பிரேம்குமாா் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினாராம். இதைப் பாா்த்த பிரேம்குமாரின் தாய் ராவணம்மாள் அவரை கண்டித்ததாகத் தெரிகிறது.
பிரச்னை நடந்தபோது இருக்கையில் அமா்ந்தபடி அஜித்குமாா் சண்டையை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது மதுபோதையின் உச்சத்தில் இருந்த பிரேம்குமாா் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து அஜித்குமாரின் கழுத்து, உதடு பகுதி யில் குத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அஜித்குமாரை அவரது குடும்பத்தினா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து தாய் ராவணம்மாள் அளித்த புகாரின்பேரில், வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரேம்குமாரை தேடி வருகின்றனா்.