செய்திகள் :

குடும்ப வன்முறை: பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது தான் உண்மையா..?

post image

குடும்ப வன்முறை... இந்தியாவில் இதை சந்திக்காத பெண்கள் குறைவு என்பது எத்தனை அவமானகரமான விஷயம்..? சில பெண்கள் பிறந்த வீட்டில்கூட குடும்ப வன்முறையை சந்திக்க நேரிடலாம். ஆனால், இந்த அலசல் கட்டுரை புகுந்த வீட்டில் பெண்கள் சந்திக்கிற குடும்ப வன்முறையை எந்தெந்த வகைகளில் முன்கூட்டியே தடுக்கலாம், வந்தபின் எந்தெந்த வகைகளில் கையாளலாம் என சில வழிகாட்டுதல்களை உங்களுக்கு சொல்லவிருக்கிறது. தவிர, புகுந்த வீட்டில் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கிறாள் என்பதன் பின்னணியில் இருக்கிற உண்மையையும் இந்தக் கட்டுரை விளக்கவிருக்கிறது.

குடும்ப வன்முறை

புகுந்த வீட்டில் நீங்கள் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிற குடும்ப வன்முறையில் நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கான பாதுகாப்பு வளையத்தை உங்கள் கல்வியும், ஒரு வேலையும்தான் ஏற்படுத்தும். இதைவிட ஆகச் சிறந்த வருமுன் தடுப்பு குடும்ப வன்முறைக்கு எதிராக இல்லை என்பதுதான் உண்மை.

'கல்யாணம் முடிஞ்சவுடனே எங்க வீட்டுக்கு வர மருமக வேலைக்கெல்லாம் போய் கஷ்டப்படக்கூடாது. நாங்க அவள நல்லா பார்த்துப்போம்' என்று உங்கள் வருங்கால புகுந்த வீட்டினர் சொன்னால், தயவு செய்து அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள். ஏனென்றால், வேலைக்குச் செல்கிற பெண்தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்கிற ஆண்களின் நோக்கத்துக்கு சற்றும் குறைவில்லாதது 'என் பொண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது' என்கிற ஆண்களின் முடிவும்.

குடும்ப வன்முறை

மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கண்டிஷன் போடுகிற ஆண்களை வெகு சுலபமாக ’பொண்டாட்டியோட காசுக்கு அலைகிறான்’ என்று இந்த சமூகம் குற்றம் சொல்லிவிடும். இதுவே, 'என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்ல இருந்து என் குடும்பத்தை, எங்க அம்மாவ நல்லா பார்த்துக்கிட்டா போதும்' என்கிற ஆணை, இந்த சமூகம் ’எவ்ளோ நல்லவன்; பொண்டாட்டியை உட்கார வெச்சு சோறு போட விரும்புறான்’ என்றுதான் பல காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த வகையான ஆண்கள், தனக்கு மனைவி மட்டுமல்ல... அவன் பிறந்த வீட்டுக்கும், வீட்டினருக்கும் சம்பளம் இல்லாத, மரியாதைக் கொடுக்கிற ஓர் உதவியாளரைத்தான் தேடுகிறான். பல நேரங்களில் உண்மை கசக்கும் தான். இதுவும் அப்படிப்பட்ட உண்மைகளில் ஒன்றுதான்.

இது புரிந்தோ, புரியாமலோ அல்லது கன்வின்ஸ் ஆகியோ பல பெண்கள் இந்த வகை ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த வகை ஆண்களை குறை சொல்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால், எனக்கு வரவிருக்கிற மனைவி சொந்தக்காலில் நிற்கக்கூடாது. அதுதான் அவள் என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதி என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லைதானே..?

அப்படியென்றால், வேலைக்குச் செல்கிற பெண்கள் குடும்ப வன்முறையை புகுந்த வீட்டில் சந்திப்பதே இல்லையா என்று கேட்டால், அவர்களும் இந்தப் பிரச்னையை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது ஒருகட்டத்தில் தனக்காகவோ அல்லது தன் குழந்தைகளுக்காகவோ, குடும்ப வன்முறையில் இருந்து தன் வாழ்க்கையை விடுவித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற முடிவெடுப்பதற்கான தன்னம்பிக்கையை சம்பந்தப்பட்ட பெண்களின் வேலை கட்டாயம் தரும். அதனால்தான் சொல்கிறோம், குடும்ப வன்முறைக்கு எதிரான முதல் மற்றும் முக்கியமான பாதுகாப்பு கேடயம் வேலையைத் தவிர வேறில்லை.

domestic violence
Domestic Violence

எந்த புகுந்த வீட்டிலும் ஒரே நாளில் குடும்ப வன்முறை ஒட்டுமொத்தமாக நிகழ்ந்து விடாது. ஒரு மனிதருக்கு எதிராக சில மனிதர்கள் ஒன்று கூடுவது படிப்படியாகத்தான் நிகழும். குடும்ப வன்முறை என்றாலே இங்கே பலரும் சினிமாக்களில் காட்டுவது போல கணவன் அடிப்பான்; மாமியாரும் நாத்தனாரும் அதை பார்த்து சிரிப்பார்கள் அல்லது அவர்களும் உடன் சேர்ந்து கொடுமை செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் ஒரு குடும்ப வன்முறை ஆரம்பத்தில் தன் வீட்டுக்குள் புதிதாக வந்துள்ள மருமகளின் நடவடிக்கைகளை, பழக்கவழக்கங்களை கேலி செய்யும். அவள் குடும்பத்தை குறைவாக பேசும். 'இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு பழக்கமே இல்ல' என்று, மருமகளைவிட மருமகள் குடும்பத்தைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்பதை அடிக்கடி நக்கல், நையாண்டியுடன் சொல்லிக்கொண்டே இருக்கும்.

மெள்ள மெள்ள அவளுடைய உணர்வுகளைக் காயப்படுத்தும். அடுத்து, 'நீ செய்யுறது எல்லாம் தப்பு; நீ செய்யுறதெல்லாம் சரி கிடையாது' என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிச் சொல்லி அவளுடைய தன்னம்பிக்கையை குறைக்கும். சில புகுந்த வீடுகளில் மருமகளை சமையல் கட்டுக்குள் அனுமதிப்பார்கள். ஏனென்றால், அங்கு வேலையாக வேண்டுமே... ஆனால், பூஜையறைக்குள் மகளுக்கு மட்டும்தான் அனுமதி. இப்படியும் மருமகள்களை மட்டம் தட்டுகிற புகுந்த வீட்டினர் இருக்கவே செய்கிறார்கள்.

Domestic violence

புகுந்த வீட்டினர் ஒரு பெண்ணுக்கு எதிராக கைநீட்டுவது என்பது உடனடியாக நிகழாது. அது கணவனே என்றாலும்... இது பொது விதி. எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உள்ளதுபோல, திருமணமான சில நாட்களிலேயே கைஓங்குகிற அன்பான கணவன்களும்? இங்கே இருக்கவே செய்கிறார்கள். இவர்களை எப்படி கையாள்வது என்று யோசிக்காமல், உங்கள் உடலையும் உயிரையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வது பெண்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. இதற்குத்தான் மறுபடியும் சொல்கிறோம், பெண்கள் அனைவரும் உங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று...

சரி, புகுந்த வீட்டில் உங்களுக்கு எதிரான குடும்ப வன்முறை நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர ஆரம்பித்து விட்டீர்கள்... இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், உங்கள் தோழி குடும்பத்தில் நடந்ததுபோல/உங்களுடன் வேலை பார்க்கிற பெண்களுடைய வீட்டில் நடந்ததுபோல ஒரு சம்பவத்தை உங்கள் புகுந்த வீட்டினர் எதிரிலேயே செல்போனில் பேசலாம். அல்லது அந்த சம்பவத்தை உங்கள் புகுந்த வீட்டினரிடமே சொல்லலாம். அந்த சம்பவம் உண்மையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது உங்கள் புகுந்த வீட்டினருக்கு எச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது.

domestic violence
Domestic Violence

கொஞ்சம் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், என் தோழி ஒருத்திக்கு/ என்னுடன் வேலை பார்க்கிற பெண் ஒருத்திக்கு புகுந்த வீட்டில் குடும்ப வன்முறை நடந்தது. அவள் காவல்துறையில் புகார் அளித்து விட்டாள் என்றோ அல்லது ஒரு வக்கீலிடம் கூறி இருக்கிறாள். அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்றோ இலை மறை காயாக சொல்லி விடுங்கள்.

இது, 'ஓ... இவள் தோழி இப்படி செய்திருக்கிறாள் என்றால், அதை இவள் பாராட்டி மகிழ்ச்சியாக பேசுகிறாள் என்றால், நாம் இவளை ஏதாவது கொடுமை செய்தால் நமக்கும் இதே கதிதான்' என்கிற பயம் புகுந்த வீட்டினருக்கு உள்ளுக்குள் நிச்சயம் வரும். வன்முறை செய்ய நினைப்பவர்களின் மனதுக்குள் பயம் வருவது என்பது குடும்பத்துக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் நல்லது.

அம்மாவுடனும் அல்லது அண்ணன் தம்பியுடனும் சேர்ந்துகொண்டு வீட்டுக்கு வந்த அண்ணன் மனைவியையோ அல்லது தம்பி மனைவியையோ குடும்ப வன்முறை செய்யும் நாத்தனார்களுக்கும் இதுவொரு மறைமுகமான எச்சரிக்கையாக இருக்கும். ஒருவேளை தன் பிறந்த வீட்டுக்கு வாழ வந்திருக்கிற பெண் தன் அம்மா மற்றும் சகோதரனுடன் சேர்த்து தன் மீதும் காவல்துறையில் குடும்ப வன்முறை புகார் கொடுத்து விட்டால், தன் வாழ்க்கையே போய்விடும் என்கிற அச்சம் நாத்தனார்களுக்கு வந்தால் ஒரு குடும்பத்தில் குடும்ப வன்முறை நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

Violence

புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு நிகழ்கிற குடும்ப வன்முறை விஷயத்தில் ’பெண்ணுக்கு பெண்ணே எதிரி’ என்கிற வாசகம் நூறு சதவிகிதம் பொருந்தாது. ஏனென்றால், இங்கே ஒரு பெண்ணுக்கு எதிரியாக செயல்படுகிற பெண்கள் ஓர் ஆணைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ’நாங்கள் ஓர் ஆணைச் சேர்ந்த குடும்பத்தினர்’ என்கிற அவர்களுடைய எண்ணம்தான், சகோதரன் தன் மனைவியை அடித்ததை சொல்லும்போது தானும் ஒரு பெண் என்பதை மறந்து மகிழ்ச்சியுடன் கேட்க வைக்கிறது.

மனைவிகள் கணவர்களை கொடுமைப்படுத்துவதே இல்லையா..? மனைவி வீட்டினர் கணவன் வீட்டினரை துன்பப்படுத்துவதில்லையா..? மனைவியின் அம்மாக்கள் மருமகன்களை கஷ்டப்படுத்துவதில்லையா..? மருமகள்கள் மாமியார்களை, நாத்தனார்களை கொடுமை செய்வதில்லையா..? இந்தக் கேள்விகள் இந்தக் கட்டுரையைப் படிக்கிற சிலருக்கு எழலாம். நியாயமான கேள்விகள்தான். ஆனால், இந்தக் கேள்விகள் தொடர்பான பிரச்னைகளின் எண்ணிக்கை இங்கே மிகச் சொற்பம்தான். அவை விதிவிலக்கானவை. இவற்றை, காலம்காலமாக பெண்கள் சந்தித்துக்கொண்டு வருகிற புகுந்த வீட்டினரின் குடும்ப வன்முறைக்கு சமமாக சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

மற்றபடி, இருப்பது ஒரு வாழ்க்கை. அதை குடும்ப வன்முறையில் தொலைத்து விடாதீர்கள் என்பது மட்டுமே பெண்களுக்கு நாம் இங்கே சொல்ல விரும்புவது..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Relationship: நிஜமாவே காதலிக்க நேரமில்லையா 2 K கிட்ஸுக்கு..?

2 கே கிட்ஸும் கால் நூற்றாண்டை தொட்டுட்டாங்க. அவங்களும் லவ், மேரேஜ்னு அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் கட்டங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. ரிலேஷன்ஷிப் தொடர்பா அவங்களோட ஒரு பிரச்னையைப் பற்றி மெள்ள மெள்ள பேச ... மேலும் பார்க்க

"கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும்!” - முதியோர் இல்லத்தில் 70 வயதில் காதல் திருமணம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 70 வயது முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70... மேலும் பார்க்க

Relationship: வளர்ந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பிரிவு; பெற்றோர் பாசிட்டிவாக கடப்பது எப்படி?

அம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் சரி, தந்தையின் மடியில் படுத்து... செல்லமாய் சிணுங்கி... அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளாக இருந்தாலும் சரி, மேல்படிப்பு, வேலை, திருமணம் எ... மேலும் பார்க்க

Relationship: நீங்கள் Toxic நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் (Toxic Relationship). 2 கே கிட்ஸ் மத்தியில் அதிகம் பேசப்படுகிற ஒரு வார்த்தை. அதென்ன டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்? சிம்பிளாக சொன்னால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற நபருடன் நேரம் செலவழி... மேலும் பார்க்க

Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..!

'ஒரு தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அன்புகூருவதற்கு இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது சில மூத்த தம்பதியரின் அனுபவ கருத்து. அது என்ன இரண்டரை ஆண்டுகள்..?happy coupleஅந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம்... மேலும் பார்க்க