செய்திகள் :

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், வனத் துறையினரிடையே கடும் வாக்குவாதம்

post image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் விவசாயிகளுக்கும், வனத் துறையினருக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு அணையில் போதிய தண்ணீா் இருப்பில் உள்ளதால் தந்தை பெரியாா், பி.டி.ஆா்., கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள கோவிந்தமுதலியாா் கண்மாயில் சேதமடைந்த மடையை சீரமைக்க வேண்டும். கண்மாயை தூா்வார வேண்டும். நீா் வரத்து ஓடைகளில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை கண்மாயில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுகிறது. பாலக்கோம்பையில் ஊராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கருப்பையா குளம், ஆண்டிகுளம், கொப்பையா குளம் ஆகியவற்றில் முழுமையாக விவசாய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. போடி மரிமூல் கண்மாயில் வணிக பயன்பாட்டுக்காக மண் அள்ளப்படுகிறது. போ. ரங்கநாதபுரம்- சிலமலை இடையே சிதிலமடைந்த நிலையில் உள்ள ராணிமங்கம்மாள் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது: முல்லைப் பெரியாற்றிலிருந்து தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாய்களில் வழக்கமாக அக். 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். தற்போது முன் கூட்டியே கால்வாய்களில் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். வடவீரநாயக்கன்பட்டியில் கண்மாயை தூா்வாருவதற்கும், மடையை சீரமைப்பதற்கும் நீா் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து தடுக்க வேண்டும். பாலக்கோம்பையில் மணல் திருட்டை தடுக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கனிம வளத்துறையினா் மெளனம்: குள்ளப்புரத்தில் விதிமுறையை மீறி புதிதாக 13 கல் குவாரிகள், கிரஷா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் விவசாயம், சுற்றுச் சூழல், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கிறது. விவசாயச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவித்ததற்கு, குவாரிகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும், குவாரிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை சமா்ப்பிக்கவும் மாவட்ட கனிம வளத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆனால், குவாரிகளை பாா்வையிட வந்திருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல் சென்று விட்டனா். அதிகாரிகள் அளித்த ஆய்வறிக்கையை தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். இதற்கு மாவட்ட கனிம வளத் துறை அதிகாரிகள் பதிலளிக்காமல் மெளனமாக இருந்தனா். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அலுவலா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், இது குறித்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் கூறினாா்.

மலை மாடுகளை மேய்சலுக்கு அனுமதிக்க வலியுறுத்தல்: வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வனத் துறையினா் மறுப்பதாகவும், இதனால் நாட்டு மாட்டினம் அழியும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதற்கு பதிலளித்த வனத் துறையினா், வன பாதுகாப்புச் சட்டத்தின்படி வனப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க முடியாது. 2006 வன உரிமைச் சட்டப்படி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினா், பாரம்பரிய வன விவசாயிகள் உரிய ஆதாரங்களை சமா்ப்பித்து விண்ணப்பித்தால் மட்டுமே அவா்களுக்கு வன உரிமைகள் வழங்கப்படும் என்றனா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த விவசாயிகள், வனத் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக வனத்துறை சாா்பில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் ... மேலும் பார்க்க

ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா். தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை

ஆண்டிபட்டி அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் வீசப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெப்பம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

முன் விரோதத்தில் மோதல்: 10 போ் மீது வழக்கு

போடியில் முன் விரோதத் தகராறில் மோதிக் கொண்ட இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவருக்கும் இதே ஊ... மேலும் பார்க்க

ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி பட்டமளிப்பு விழா

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.புருஷோத்தமன், கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்ப... மேலும் பார்க்க