குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலான இந்த மசோதாவை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தாா்.
குவாஹாட்டியில் அமையும் ஐஐஎம் கல்வி நிறுவனத்தை, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) சட்ட அட்டவணையில் சோ்ப்பதற்கு இந்த சட்ட மசோதா வழி செய்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முழு அளவிலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) என்ற பிரிவினைவாத அமைப்புக்கும் இடையே தீா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின்படி, சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, குவாஹாட்டியில் ஐஐஎம் அமைக்கப்படுகிறது.
தற்போது நாட்டில் 21 ஐஐஎம்-கள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டு, ஐஐஎம் சட்ட அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.