கூடமலை அருகே தீயணைப்பு வாகனம் மோதி டிராக்டர் கவிழ்ந்தது: 7 போ் காயம்
கெங்கவல்லி அருகே கூடமலைப் பகுதியில் தீயணைப்புத் துறை வாகனம் மோதியதில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 போ் காயமடைந்தனா்.
தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியில் மலைப்பாம்பை பிடிப்பதற்காக கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) வெங்கடேசன், பணியாளா்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா், ரமேஷ், வசந்த் ஆகியோருடன் தீயணைப்பு வாகனம் செவ்வாய்க்கிழமை தம்மம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

தீயணைப்பு வாகனம், கூடமலையை அடுத்துள்ள கவுண்டன்பாளையத்தை அடைந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது மோதியது. இதில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டரில் தம்மம்பட்டி கொக்கான்காட்டை நோக்கி செங்கோட்டுவேல் (59) ல் ஜல்லிசிப்சம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா்.
விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணனுக்கு காலில் காயமேற்பட்டது. டிராக்டா் ஓட்டுநா் உள்பட மற்ற 6 பேரும் லேசான காயம் அடைந்தனா். அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
