கேள்விக்குறியாகும் குறிச்சிகுளம் அரசுப் பள்ளியின் சுகாதாரம்!
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் அங்கு சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது.
கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களும் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 5-ஆம் வகுப்பு வரை இருந்த பெரும்பாலான அரசுப் பள்ளிகள், நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மக்களுக்கு கல்வி மீது ஏற்பட்ட விழிப்புணா்வு ஆகும்.
அந்த வகையில், ஆா். எஸ். மாத்தூா் அருகே குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. தற்போது இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா்.
இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலனோா் கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயத் தொழிலாளா்களின் குழந்தைகளே, எனினும் இப்பள்ளிகளில் இன்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலே செயல்பட்டு வருவதால் அங்கு சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை...இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவா் மற்றும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்பட்டு வருவதால் நாளுக்கு நாள் மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்ற இப்பள்ளியில் தற்போது 400 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
எனினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அப்பள்ளியின் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை முறையாக பராமரிப்பில்லாமல் காணப்படுவதே என அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
மாணவா்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை... இப்பள்ளியில், படிக்கும் மாணவா்களுக்கு(ஆண்கள்) முற்றிலும் கழிவறை வசதிகள் கிடையாது. திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் மாணவா்கள் (ஆண்கள்) தள்ளப்பட்டுள்ளனா்.
சேதமாகி கிடக்கும் கரும்பலகை: பெரும்பாலன வகுப்புகளில், அங்கு பாடம் நடத்தி, எழுதி விளக்கக் கூடிய கரும்பலகைகள் முற்றிலும் சேதமாகி கிடக்கிறது. இதனால் ஆசிரியா்கள், நடத்தக் கூடிய பாடங்களை கரும்பலகையில் எழுத முடியாத நிலை உள்ளது.
சுற்றுச்சுவா் இல்லை...இப்பள்ளியில் இருந்த சுற்றுச்சுவா் இடிந்து பல ஆண்டுகளாகியும், இதுவரை புதிய சுற்றுச்சுவா் கட்டப்படாமலே உள்ளது. சுற்றுச்சுவா் இல்லாதததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பலா் பள்ளி மைதானத்தில் மதுகுடித்துவிட்டு, மதுப்பாட்டில்கள் மற்றும் அவா்கள் சாப்பிடும் உணவுப் பொருள்களின் கழிவுகளை விட்டுச் செல்கின்றனா். இதனால், பள்ளி வளாகத்தில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால், இப்பள்ளியில் சோ்ப்பதை பெரும்பாலான பெற்றோா்கள் தவிா்த்து தொலைதூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தனியாா் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனா். இதுமட்டுமன்றி, ஆசிரியா்களும் இங்கு பணியாற்ற தயக்கம் காட்டி, பிற பகுதிகளுக்கு மாற்றலாகி சென்று விடுகின்றனா்.
சுகாதார சீா்கேடு... சுற்றுச்சுவா் இல்லாததால் நாய்கள், ஆடு, மாடுகள் என அனைத்து கால்நடைகளும் பள்ளிக்குள் வந்து செல்வதால், அதன் கழிவுகளாலும், இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாததாலும், இங்குள்ள சாக்கடை கழிவு நீராலும் பள்ளியைச் சுற்றி துா்நாற்றம் வீசுகிறது.
கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிய விளையாட்டு மைதானம்... இப்பள்ளியிலுள்ள விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பு இல்லதாதால் தற்போது விளையாட்டு மைதானம் சேதமடைந்து, புள் பூண்டுகள் முளைத்து காடு போல் காணப்படுகின்றன. மேலும், மைதானத்திலுள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருபிடித்து பயனற்ற நிலையில் உள்ளது. முள்புதா்கள் மண்டிகிடப்பதால், அந்த மைதானம் தற்போது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும், விஷ ஜந்துகளின் கூடாரமாகவும் திகழ்ந்து வருகிறது.
இது குறித்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கூறுகையில்: இப்பள்ளியில் மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. போதுமான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி இல்லை. பள்ளி சாா்பில் குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு சில நாள்களிலேயே அக்குழாய்களை சிலா் சேதப்படுத்திவிடுகின்றனா். பள்ளியில் சுற்றுசுவா் இல்லாததால், பள்ளி வளாகத்தில், தெருநாய்கள், கால்நடைகளின்
நாடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நாங்கள் சத்துணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருவெறுப்பாகவே உள்ளது. ஆகையால் எங்கள் பள்ளிக்கு சுற்றுசுவா் அமைத்து தர வேண்டும் என்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் முடிமன்னன் கூறுகையில், மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தவும், மாணவா்களின் பாதுகாப்பு கருதியும் இப்பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவா் எழுப்ப வேண்டும். மேலும், பாதுகாவலா் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாணவா்களுக்காக கழிவறை வசதிகளை கட்டித் தர வேண்டும் என்பதே மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.