கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாததால், குடிநீா்ப் பற்றாக்குறையும், வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. மேலும், உணவு, நீா்த் தேவைக்காக வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பிரகாசபுரம், பெருமாள்மலை, நாயுடுபுரம், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதையடுத்து, குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
மேலும், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றுக்கு இரண்டு மாதங்களாக போதிய தண்ணீா் இல்லாமல் விவசாயிகள் கவலையடைந்து வந்தனா். இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.