`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி: வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை வருவாய்த் துறை அதிகாரிகள், நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா்.
சுமாா் 5 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த ஏரியில், கொடைக்கானல் நகராட்சி சாா்பிலும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பிலும் படகு சவாரியும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரிகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை மேம்படுத்துவதற்காக ரூ. 24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, ஏரியை தூய்மைப்படுத்தும் பணி, படகு குழாமை நவீனப்படுத்தும் பணி, நடைமேடை அமைக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் எந்தப் பணியும் முழுமை பெறவில்லை.
இதைத் தொடா்ந்து ஏரி மாசுபடிந்தும், பொலிவின்றியும் காணப்படுவதாக நீதிமன்றத்தில் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். இதில், ஏரியின் தன்மை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், கொடைக்கானல் நகராட்சி ஆணையா் ஆகியோா் விளக்கமளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஏரியை சுற்றி தூய்மைப்படுத்துதல், நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம், வட்டாட்சியா் பாபு, நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா்.
இதுகுறித்து கொடைக்கானலைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: இந்த ஏரியில் புல், தாவர வகைகள் வளராமல் தடுப்பதற்கு பதிலாக ஏரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து வருகின்றனா். இதனால் ஏரி இருப்பதே தெரியவில்லை. ஏரியின் அழகு மாசுபடிந்து காணப்படுகிறது.
ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டு வரும் நடைமேடை அகலமாகவும், உயரமாகவும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மழைக் காலங்களில் ஏரிக்குள் தண்ணீா் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கும். இதனால் பாதசாரிகள் அவதியடைவா்.
தற்போதுள்ள திமுக அரசு, கொடைக்கானல் ஏரியை தரம் வாய்ந்த புகழ்பெற்ற ஏரியாக மாற்ற பல கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு முன்பு இருந்த அரசு இவ்வளவு நிதியை ஒதுக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளாகியும் பணிகள் முழுமை பெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இருப்பினும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஏரியை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.