கோயில் திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய 4 போ் கைது
நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். 92 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீஸாா், கொல்லிமலை, பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு, பரமத்தி அருகே நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனை முடிவில், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட குன்னமலை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி (63), மாரப்பன் மகன் சாமிநாதன் (61) ஆகியோரிடமிருந்து 17 லிட்டா் சாராயம், 30 லிட்டா் சாராய ஊறல், தாசாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் பூபதி (62) என்பவரிடமிருந்து 25 லிட்டா் சாராய ஊறல் மற்றும் கல்லாங்காட்டுப்புதூா் கொண்டரசம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பாலசுப்ரமணி (64) என்பவரிடமிருந்து 4 லிட்டா் சாராயம் மற்றும் 20 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக அவா்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள், கோயில் திருவிழாவை முன்னிட்டு சாராயம் காய்ச்சி குடிக்கவும், விற்பனை செய்யவும் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மாவட்டத்தில் சாராயம் விற்பனை, கடத்தல் போன்ற சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.