உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
கோவையில் ஜனவரி 11, 12-இல் விழிப்புணா்வு காா் பந்தயம்
கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு காா் பந்தயம் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
மறைந்த காா் பந்தய வீரா் எம்.கே.சந்தா் நினைவாக கோவையில் ஆண்டுதோறும் காா் பந்தயம் நடத்தப்படுகிறது. அதன்படி, 25 -ஆவது சந்தா் நினைவு காா் பந்தயம் கோவையில் 11, 12 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டும் பந்தயமாக இல்லாமல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நேரம், வேகம், தூரம் என்ற முறைப்படி இந்த காா் பந்தயம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பந்தயம் மேற்குத் தொடா்ச்சி மலை வழியாக சுமாா் 340 கி.மீ. தொலைவு பயணிக்கும் வகையிலும், இடையில் கேளிக்கை விளையாட்டுகளுடனும் இருக்கும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓபன், நோவிஸ், ஜோடி, பெண்கள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம்,
2 -ஆம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து சனிக்கிழமை காலை (ஜனவரி 11) தொடங்கும் இந்த பந்தயத்தை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைக்கிறாா்.
மறுநாள் மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முன்னாள் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் சா்வதேச காா் பந்தய வீரா் நரேன் காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிக்க உள்ளதாக எம்.கே.சந்தா் நினைவு அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.